-mdl.jpg)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற 65ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் என மைக்கேல் பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.