
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 174 ரன்கள் அடித்தது. மிகச்சிறப்பாக செயல்பட்ட டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஜோடி 137 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 59 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
இந்த இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் சற்று நம்பிக்கையை அளித்த பிரப்சிம்ரன் 46 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறியதால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சரிவை சந்தித்திருக்கிறது. ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான நேரத்தில் ஒரு ரன் அவுட் என்று அசத்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய போட்டியில் பாப் டு பிளசிஸ் இம்பேக்ட் வீரராக செயல்பட்டதால் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய விராட் கோலி, போட்டி முடிந்த பிறகு பேசுகையில், “புள்ளிப்பட்டியலில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை வைத்து அணியை வரையறுக்க முடியாது. ஆட்டம் செல்லசெல்ல 13 அல்லது 14வது போட்டியில் எங்கே இருக்கிறோம் என்பதை பாருங்கள். அதற்கேற்றவாறு தான் எங்களது கவனம் இருக்கும். இன்று டு பிளசிஸ் விளையாடிய விதம் ஆர்சிபி அணி 20-30 ரன்கள் கூடுதலாக அடிப்பதற்கு உதவியது.