
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மொஹாலியில் நடைபெற்ற ஒப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் போராடி 153/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்தியூ சார்ட் 36 (24) ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்கள் துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த விருத்திமான் சஹா 5 பவுண்டரியுடன் அதிரடியாக 30 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சாய் சுதர்சன் 2ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக விளையாடாமல் 19 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவர்களில் கேப்டன் பாண்டியாவும் 8 (11) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட சுப்மன் கில் அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் பதறாமல் செயல்பட்ட ராகுல் திவாட்டியா பவுண்டரியுடன் 5* (2) ரன்களும் டேவிட் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்து 19.5 ஓவரில் குஜராத்தை வெற்றி பெற வைத்தனர்.
முன்னதாக இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் ஆரம்பம் முதலே மெதுவாக விளையாடியது எதிர்புறம் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக சமீப காலங்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்து உச்சகட்ட பார்மில் இருந்தும் இப்போட்டியில் 10 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து நன்கு செட்டிலாகியும் மெதுவாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 50 ரன்களை தொட்ட பின்பு தான் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஒருவேளை சற்று முன்னதாகவே அவர் வேகமாக செயல்பட்டிருந்தால் கடைசி ஓவர் வரை போராடாமல் குஜராத் முன்கூட்டியே வென்றிருக்கும்.