
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் பரபரப்பான போட்டியில் மோதிக்கொண்டன. கடந்த முறை இரண்டு அணிகளும் மூன்று முறை மோதிக்கொண்டதில் மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றி பெற்று இருந்தது. சிறந்த அணியாக இருந்த போதும் ராஜஸ்தான் அணியால் குஜராத் அணியை கடந்த முறை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் கோப்பையையும் பறி கொடுத்தது.
இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி ஆரம்பத்தில் பதுங்கி பின்பு பாய்ந்து 177 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்குதான். இந்த முறை குஜராத்தை வீழ்த்தி விடலாம் என்று களம் இறங்கிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு முகமது சமி தனது உலகத் தரமான சீம் வேகப்பந்து வீச்சு மூலம் கடுமையான அச்சுறுத்தலை தந்தார். அவரை மீறி ராஜஸ்தான் பேட்மேன்களால் ரன் எடுக்க முடியாதது மட்டுமில்லாமல் விக்கட்டுகளையும் பறி கொடுத்தார்கள்.
மிக மோசமான இந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் அதிரடியாக விளையாடினார். அவர் ஆட்டம் இழந்ததும் கொஞ்சம் கூட அதை பொருட்படுத்தாமல் ஹெட்மையர் மிகச் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் குவித்து அட்டகாசமாக ஆட்டத்தை நிறைவு செய்தார்.