இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
எங்கள் அணியில் ஒருத்தர் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. மொஹ்சின் கான், குர்னால் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி என்று ஆட்டநாயகன் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7ஆவது வெற்றியை பெற்றது. லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 6ஆவது தோல்வியை தழுவியது. இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய மார்கஸ் ஸ்டொய்னிஸ், “மிகச் சிறந்த தருணம் இது. மோசின் கான் கடந்த ஓராண்டாக போதிய கிரிக்கெட் விளையாடவில்லை. அவருக்கு இது மிகப் பெரிய தருணமாக இருக்கும். குறிப்பாக டெத் ஓவரில் பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. மிகமிக நெருக்கமான தருணத்தில் ஆட்டம் எங்களது பக்கம் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.
நடுவில் ஸ்பின்னர்கள் சில சிறப்பான ஓவர்களை வீசினார்கள். கடைசியில் மோசின் கான் ஆட்டத்தை மொத்தமாக முடித்துக் கொடுத்துவிட்டார். எங்களது அணியில் தனிப்பட்ட சூப்பர் ஸ்டார் எவரும் இல்லை. இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த வெற்றி. குர்னால் பாண்டியா பேட்டிங்கில் பக்கபலமாக இருந்தார். மோசின் பவுலிங்கில் கலக்கினார். இதெப்படி தனிப்பட்ட வெற்றியாகும்.
குர்னால் பாண்டியா கேப்டனாக நின்று வழிநடத்துவது மற்றும் பயிற்சியாளர் ஆண்டி ப்லவர் இருவரும் இணைந்து செயல்படுவது சிறப்பாகவே இருக்கிறது. போட்டி பற்றிய சிறந்த உணர்வு கொண்டவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now