
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்றுவரும் 42ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. மும்பை வான்கடேவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஸ்கோரை உயர்த்த மறுமுனையில் ஜோஸ் பட்லர் வழக்கத்திற்கு மாறாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 19 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சிக்சர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினாலும் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து விளையாடி வந்தார்.