
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தி டெல்லி கேப்பிட்டல்ஸை பேட்டிங்கை அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 20 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த ஷாய் ஹோப் - கேப்டன் ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் தனது கம்பேக் ஆட்டத்தில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.