
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களில் பெரும் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர் இதுவரை வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்துள்ளது. 10 அணிகள், 250 வீரர்கள், 2 மாதங்கள், ஒரு கோப்பை என்று நடக்கும் ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக ஒருமுறை தென் ஆப்பிரிக்காவிலும், மற்றொரு முறை ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டது. அதேபோல் கரோனா பாதிப்பு ஏற்பட்ட போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.
ஆனால் இம்முறை இந்தியாவிலேயே தொடரை நடத்த பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதனை சில வாரங்களுக்கு முன்பு ஐபிஎல் சேர்மேன் அருண் சிங் துமால் உறுதி செய்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் எப்போது நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடைஎயெ எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசி வாரத்தில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொச்சியில் நடைபெற்றது.