
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்ஷன் மற்றும் ஷாருக் கான் ஆகியோரது அதிரடியான அரைசதங்களின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 84 ரன்களையும், ஷாருக் கான் 58 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, வில் ஜேக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் விராட் கோலி அரைசதம் அடிக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில் ஜேக்ஸ் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 100 ரன்களையும், விராட் கோலி 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் வில் ஜேக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.