ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; சிஎஸ்கேவை 162 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் அறிமுக வீரர் ரிச்சர் கிளீசன் சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களைச் சேர்த்திருந்த அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஷிவம் தூபே மூன்றாம் வரிசையில் களமிறங்கி தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
Trending
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சமீர் ரிஸ்வியும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வந்தார். தொடர்ந்து ரன்களைச் சேர்க்க தடுமாறிய சமீர் ரிஸ்வி 23 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து 15 ரன்கள் எடுத்த நிலையில் மொஹீன் அலியும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் மகேந்திர சிங் தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now