
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெனற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செலும் 28 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செலின் விக்கெட்டை ஜெய்தேவ் உனாத்கட் கைப்பற்றினார். ஆனாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய கெய்க்வாட் தனது அதிரடியைத் தொடர்ந்தார்.