
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹாவும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் சாய் சுதர்ஷன் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் மில்லர் இணை மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.
இப்போட்டியில் சரியாக பந்தை டைமிங் செய்துவந்த சாய் சுதர்ஷன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவையில்லாமல் சிங்கிள் எடுக்க முயற்சித்து ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதோ ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டேவிட் மில்லரும் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அபினவ் மனோகர் 8 ரன்களுக்கும், இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஷாரூக் கான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸின் முதல் ஓவரிலேயே தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.