ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி-யை 172 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோவ்மன் பாவெலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வந்த விராட் கோலியும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Trending
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் ராஜத் பட்டிதார் இணை பொறுப்பாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தி வந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 27 ரன்கள் எடுத்திருந்த கேமரூன் க்ரீனும், அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணியும் 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜத் பட்டிதாரும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்த நிலையில், மூன்றாம் நடுவரின் தவறான முடிவின் காரணமாக நாட் அவுட் என்ற தீர்ப்பினால் களத்தில் நீடித்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாம் நடுவர்களின் தீர்பானது தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மஹிபால் லாம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடிய மஹிபல் லாம்ரோர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களிலும் என ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்வப்நில், கரன் சர்மா ஆகியோர் பவுண்டரிகளை அடிக்க 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now