
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்தினன. இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தொடங்குவது தாமதமானது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நடப்பு சீசனில் சரியான தொடக்கம் கிடைக்காமல் தடுமாறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து சிறப்பான தொடத்தைப் பெற்றனர். இதனால் இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய ஸ்கோரை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஷித் கானின் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 42 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியத்துடன், சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.