ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!
லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்டதாக அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 55 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா மற்றும் நமன் தீர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 68 ரன்களையும், நமன் தீர் 62 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டனர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்து பிசிசிஐ உத்திரவிட்டுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே இந்த சீசனில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு இரண்டு முறை அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அவர் இதே தவறை செய்த காரணத்தின் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிப்பதுடன், ஒரு போட்டியில் விளையாடுவதற்கான தடையையும் பிசிசிஐ விதித்துள்ளது. இதன் மூலம், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த வீரர்கள் மற்றும் இம்பேக்ட் வீரர் உள்பட அனைவருக்கு ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now