
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி விராட் கோலி, ராஜத் பட்டிதார் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்க்ளையும், ராஜத் பட்டிதார் 50 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “கடந்த இரண்டு போட்டிகளாகவே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடியுள்ளோம் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 270 ரன்களுக்கு மேல் அடித்தும் நாங்கள் 260 ரன்கள் வரை இலக்கை துரத்திச் சென்றோம். அதேபோன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தோம். இப்படி நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் இதுபோன்ற ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.