ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா கேப்டன்சியில் மும்பை அணி என்ன சாதித்ததோ, இனிமேல் அதனை நான் முன்னெடுத்துச் செல்கிறேன் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் துபாயில் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை அறிவித்தது. அதேசமயம், டிரேடிங் முறையில் வீரர்களை சில அணிகள் பிற அணிகளிடம் இருந்தும் வாங்கினர்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் கேப்டனாக ஹார்திக் பாண்டியா வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக அறிமுக சீசனிலேயே அவர் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதனபின் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
Trending
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் ஹர்திக் பாண்டியா முதல்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ரோஹித் சர்மா உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். நிச்சயம் இந்த சீசனில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஏனென்றால் எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ரோஹித் உதவுவார்.
ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பது எனக்கு உதவும். அவரின் தலைமையில் உள்ள இந்திய அணி நிறைய சாதனைகளை படைத்துள்ளது. அவரது கேப்டன்சியில் மும்பை என்ன சாதித்ததோ, இனிமேல் அதனை நான் முன்னெடுத்துச் செல்கிறேன். சீசன் முழுவதும் அவர் என் தோளில் கை வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். எனது கிரிக்கெட் பயணத்தில் பெரும்பான்மையான பகுதி ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் விளையாடியிருக்கிறேன். அதனால் ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now