
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் தனது காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கினர்.
ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கேப்டனாக ரிஷப் பந்த் மீண்டும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.