
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்த பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் சுனில் நரைனுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் சுனில் நரைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அங்கிரிஷ் ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் தனது அதிரடியை கைவிடாத சுனில் நரைன் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியது 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் அணியின் அதிரடி நாயகன் ஆண்ட்ரே ரஸல் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.