
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிகான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம்போல் சுனில் நரைன் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களை விளாசிதள்ள கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 76 ரன்களைக் குவித்தது. அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேபோல் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட்டும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரைன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த நிலையில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - ஆண்ட்ரே ரஸல் இணையும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.