
ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் 8 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசனின் முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற செய்ததில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்கு மிக முக்கியமானது. காரணம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கேகேஆர் அணிக்காக் விளையாடிய பிரண்டன் மெக்கல்லம் சதமடித்து அசத்தியதுடன், 73 பந்துகளில் 10 பவுண்டரி, 13 சிக்சர்கள் என 158 ரன்களை குவித்து அசத்தியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனாலும் அந்த அணியில் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதன்பின் அணியின் கேப்டனாக பொறுப்பை ஏற்ற கௌதம் கம்பீர் தலைமையில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி ஆசத்தினாலும், அத்தொடரில் கேகேஆர் அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.