ஐபிஎல் 2024: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஸ்டொய்னிஸ்; சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் அபாரமான சதத்தின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். ஏற்கெனவே இத்தொடரில் லக்னோ அணியிடம் தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் களமிறங்கியது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே ஆகியோர் களமிறங்கினர். இதில் ரஹானே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேரில் மிட்செல் 11 ரன்களில் ஆட்டமிழந்து மீன்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் ருதுராஜுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
Trending
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். பின் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே வழக்கம் போல் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதுவரை பவுண்டரிகளை மட்டுமே அடித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் சிக்ஸர்களை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளிய ஷிவம் தூபே 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியாது. அதன்பின் 3 பவுண்டரி, 7 சிகஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்திருந்த ஷிவம் தூபே எதிர்பாராதவிதமாக ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து இன்னிங்ஸை முடிக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 108 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களைக் குவித்தது. லக்னோ அணி தரப்பில் மேட் ஹென்றி, யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். மறுபக்கம் அதிரடியாக விளையாடும் முயற்சியில் கேஎல் ராகுல் 16 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்களில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
ஆனால் தனது அதிரடியைக் கைவிடாத மார்கஸ் ஸ்டொய்னிஸ் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வந்த தேவ்தத் படிக்கல் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மதீஷா பதிரனா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஆரம்பத்தில் தடுமாறினாலும், இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை வீசிய ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
பின்னர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்கள் எடுத்த நிலையில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை மதீஷா பதிரனா கைப்பற்றினார். ஆனாலும் மறுபக்கம் தனது அதிரடியைக் கைவிடாத மார்கஸ் ஸ்டொய்னிஸ் 56 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் லக்னோ அணி வெற்றிக்கு 32 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பதிரனா 19ஆவது ஓவரை வீச, அந்த ஓவரில் மூன்று பவுண்டரி உள்பட 15 ரன்களைக் கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இன்னிங்ஸின் கடைசி ஓவரை முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீச, அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசி மார்கஸ் ஸ்டொய்னிஸ் லக்னோ அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி பெற செய்தார்.
Win Big, Make Your Cricket Tales Now