
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிவம் தூபே 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 51 ரன்களைச் சேர்த்தார்.
அதேபோல் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சமீர் ரிஸ்வி இரண்டு சிக்சர்களை விளாசி 14 ரன்களைச் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களோடு நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹாவும் 21 ரன்களில் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.