
நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட முயன்ற அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 12 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.