
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்றிவருகிறது. இத்தொடரில் இதுவரை 21லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றதுடன் நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பெற்றது.
இதையடுத்து இரவு நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளின் முடிவு நடப்பு ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நேற்றுவரை புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது, டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அந்த அணி இதுவரை நான்கு போட்டியில் விளையாடி ஒரு வெற்றி, மூன்று தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் இருக்கிறார்கள். ஆனால் ரன் ரேட் அடிப்படையில் அவர்கள் முன்னிலைப் பெற்றிருப்பதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல், லக்னோ அணி தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் தற்போது அவர்கள் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.