
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இண்று முதல் தொடங்கியுள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டின் செய்வதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் வைபவ் அரோரா பந்துவீச்சில் ஆண்ட்ரே ரஸலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக தொடங்கினாலும், 9 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.