
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியனான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல போராடிவரும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதனால் ஆர்சிபி அணி முதல் நான்கு ஓவர்களிலேயே 40 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
அதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விளாசிய ஃபாஃப் டூ பிளெசிஸ், அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட நினைத்து தூக்கி அடித்தார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படாமல் டீப் பேக்வேர்ட் திசை நோக்கி செல்ல, அங்கு ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார்.