ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இரு அணிகளுக்கும் இது மிகவும் மிக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற கட்டாயத்தில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
Trending
அதேசமயம் மறுபக்கம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இது மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஆர்சிபி அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 7ஆம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறுவதுடன், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைக் கணக்கில் கொண்ட பிளே ஆஃப் வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளது.
இதனால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரிஷப் பந்த் இரண்டு முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அபராதம் வித்திக்கப்பட்டது.
A Massive Blow to DC's Playoff Chances! #IPL2024 #BCCI #RishabhPant #CricketTwitter pic.twitter.com/3D8lQ3nAFY
— CRICKETNMORE (@cricketnmore) May 11, 2024
இந்நிலையில் தான் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் மூன்றாம் முறையாக இந்த தவறை செய்த ரிஷப் பந்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்து பிசிசிஐ உத்திரவிட்டுள்ளது. இதன்மூலம் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்கமாட்டார்.
இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை டேவிட் வார்னர் அல்லது அக்ஸர் படேல் ஆகியோர் வழிநடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் டேவிட் வார்னர் ஏற்கெனவே கடந்த சீசனில் அணியை வழிநடத்தியுள்ளார். இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now