தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும் - ராபின் உத்தப்பா!
தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இப்போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும், காணொளிகளும் நாளுக்கு நாள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Trending
தற்போது எம்எஸ் தோனி 42 வயதை எட்டியுள்ளதால் இது அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்ற கருத்துகள் வெளியாகி வருகின்றன. கடந்த 14 சீசன்களாக சிஎஸ்கே அணிடை வழிநடத்தி வந்துள்ள எம்எஸ் தோனி, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் தோனிக்கு இருக்கும் பிரச்சனை குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய உத்தப்பா, “தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அவரை சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும். மேலும் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தோனியை விளையாட சொல்லி சிஎஸ்கே அணி அழைக்கும். ஆனால் தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை.
தற்போது அவருடைய பிரச்சனையே விக்கெட் கீப்பிங் தான். ஏனெனில் அவருடைய முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதையும் மீறி அவர் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஒருவேளை தம்மால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்று அவர் நினைத்தால் நிச்சயம் ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி விலக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணி: மகேந்திர சிங் தோனி(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதிஷா பதிரனா, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரஹ்மான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், அவினாஷ் ராவ் ஆரவலி.
Win Big, Make Your Cricket Tales Now