Advertisement

ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஓர் பார்வை!

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 12, 2024 • 19:42 PM
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஓர் பார்வை!
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஓர் பார்வை! (Image Source: Cricketnmore)
Advertisement

இந்திய ரசிகர்களால் ‘கிரிக்கெட் திருவிழா’ என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசனை எதிர்நோக்கிவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் தொடக்கத்தில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக இத்தொடர் ஆரம்பிப்பதற்கு 10 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது. 

அந்தவரிசையில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனிலாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் இத்தொடரில் அதிகரித்துள்ளன. ஏனெனில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் வலிமையான அணியாக கருதப்படும் ஆர்சிபி அணியால் இதுநாள் வரை ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியாதது அந்த அணியின் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்து வருகிறது. இதனால் இந்த சீசனில் ஆர்சிபி அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர். அதன்படி நடப்பு சீசனில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Trending


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள அணியாக பார்க்கப்படுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். ஏனெனில் உலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் ஆர்சிபி அணியில் விளையாடிய போதும் அந்த அணியால் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஒவ்வொருமுறையும் அந்த அணி ‘ஈ சாலா கப் நம்தே’ என முழங்கினாலும் ஒருமுறை கூட அவர்களாக கோப்பையை நெருங்கமுடியவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரை நட்சத்திர வீரர் விராட் கோலி அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். 

அவரது தலைமையில் சிறப்பான செயல்பாடாக ஆர்சிபி அணி ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும், அதில் கோப்பையை கைப்பற்றவில்லை. அதேநேரம், மொத்தமாக 8 முறை அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒரு தொடரில் அதிக ரன்கள் சேர்த்ததற்கான ஆரஞ்சு தொப்பியை பெங்களூர் அணிக்காக விளையாடி 3 பேர்  வென்றுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணி மற்றும் குறைந்த பட்ச ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனைகளையும் ஆர்சிபி அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சீசனில் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றும் என அந்த அணி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

ஆர்சிபி அணியின் பலம்

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைதான் அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. காரணம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரரான விராட் கோலி இருப்பது தான். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அந்த அணியின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்பட்டு வருகிறார். இதுவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே  ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள அவர், 7 சதங்கள், 50 அரைசதங்கள் என 7,263 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். 

அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நாயகர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இந்திய வீரர்கள் ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கிளென் மேக்ஸ்வெல் களத்தில் நின்றுவிட்டால் நிச்சயம் அது எதிரணிக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என்பதை அவருடை சமீபத்திய ஃபார்ம் காட்டுகிறது. அவருடன் வில் ஜேக்ஸ், கேமரூன் க்ரீன் போன்ற அதிரடி வீரர்களும் நடப்பு சீசனுக்கான ஆர்சிபி அணியில் இணைந்துள்ளது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான சதம், ஒருநபரின் அதிகபட்ச ஸ்கோர், ஒரு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர், ஒரு போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என, பேட்டிங் தொடர்பான பெரும்பாலான சாதனைகளையும் அந்த அணியே தன் வசம் வைத்துள்ளது. ஒட்டுமொத்த அணியாக இல்லாவிட்டாலும், தனிநபராகவே அணிக்கு வெற்றியை பெற்று தரக்கூடிய தரமான வீரர்கள் இருப்பது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இப்படிபட்ட அதிரடியான பேட்டிங் லன் -அப்பிற்கு ஏற்றவாறு, அந்த அணியின் பெரும்பாலான போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது. 

ஆர்சிபி அணியின் பலவீனம்

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது அந்த அணியின் பந்துவீச்சு துறை தான். காரணம் முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, லோக்கி ஃபர்குசன், டாம் கரண், அல்ஸாரி ஜோசப், யாஷ் தயாள் போன்ற வீரர்கள் இருந்தாலும், இவர்கள் ரன்கள் வாரி வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளது அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதில் லோக்கி ஃபர்குசன், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருந்தாலும் மற்ற வீரர்கள் பேட்டர்களை கட்டுப்படுத்துவார்களாக என்பது மிகப்பெரும் கேள்விகுறிதான். 

அதிலும் குறிப்பாக அந்த அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஹர்ஷல் படேல், வநிந்து ஹசரங்கா போன்ற வீரர்களை வெளியேற்றியது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த இரண்டு சீசன்களில் இவர்கள் இருவரும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ரன்களையும் கட்டுப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஹர்ஷல் படேல் டெத் ஓவர்களில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என்பதனை மறந்துவிட முடியாது. 

மேலும் அணியில் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடும் ஆற்றல் கொண்டவர்கள். இதனால் அணிக்கு சில சமயங்களில் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலான போட்டிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறுவதும் நடந்துள்ளது. இதனால் பல நேரங்களில், அணியின் வெற்றிக்கு கோலி தான் தனி ஆளாக போராடியாக வேண்டும் என, அவரையே சார்ந்து இருப்பதும் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த பிரச்சனைகளை ஆர்சிபி அணி எவ்வாறு கையாளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

ஆர்சிபி ஐபிஎல் வரலாறு

  • 2008 - லீக் சுற்று 
  • 2009 - இரண்டாம் இடம் (ரன்னர் அப்)
  • 2010 - பிளே ஆஃப் சூற்று
  • 2011 - இரண்டாம் இடம்
  • 2012 - லீக் சுற்று
  • 2013 - லீக் சுற்று
  • 2014 - லீக் சுற்று 
  • 2015 - பிளே ஆஃப் சுற்று
  • 2016 - இரண்டாம் இடம் 
  • 2017 - லீக் சுற்று
  • 2018 - லீக் சுற்று 
  • 2019 - லீக் சுற்று 
  • 2020 - பிளே ஆஃப் சுற்று
  • 2021 - பிளே ஆஃப் சுற்று
  • 2022 - பிளே ஆஃப் சுற்று
  • 2023 - லீக் சுற்று

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜேக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லோக்கி ஃபெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

ஆர்சிபி போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 22 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சேப்பாக்கம்
  • மார்ச் 25 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரு
  • மார்ச் 29 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு
  • ஏப்ரல் 02 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு
  • ஏப்ரல் 06 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ - ஜெய்ப்பூர்
     


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement