ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 68 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறு அணி எது என்ற வாழ்வா சாவா என்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இதனால் அந்த அணி முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்திலும் தங்களது அதிரடியைக் கைவிடாத இந்த ஜோடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Trending
பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். இதனையடுத்து இணைந்த ராஜத் பட்டிதார் மற்றும் கேமரூன் க்ரீன் இணையும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வந்த ராஜத் பட்டிதார் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேரில் மிட்செலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 14 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். ஆர்சிபி தரப்பில் முதல் ஓவரை கிளென் மேக்ஸ்வெல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தையே அடிக்க முயற்சித்த ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல்லும் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். அவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அஜிங்கியா ரஹானே 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிவம் தூபேவின் அவசத்தினால் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகினார். அதுபோது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபேவும் 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் விக்கெட்டை இழந்து சிஎஸ்கே ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் சாண்ட்னரும் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் இணைந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி ஆர்சிபி தரப்பில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை யாஷ் தயாள் வீச, அந்த ஓவரின் முதல் பந்தையே தோனி மைதானத்திற்கு வெளியே அனுப்பு மிரட்டினார்.
அதன்பின் இரண்டாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த தோனி 25 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் இரண்டு பந்துகளில் ஒரு சிங்கிள் எடுக்க, இறுதிவரை களத்திலிருந்த ரவீந்திர ஜடேஜா 42 ரன்களைச் சேர்த்த நிலையிலும் சிஎஸ்கே அணியால் குறிப்பிட்ட இலக்கை எட்ட முடியாததுடன், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now