
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்துள்ளது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேபோல் கேமரூன் க்ரீன் 33 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் 85 ரன்களை குவித்தது. இந்நிலையில் இப்போட்டியின் நடுவே விராட் கோலி மற்றும் கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் கட்டியணத்து நலம் விசாரித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.