ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதைல் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இப்போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய இளம் வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷிகர் தவான் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Trending
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 98 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாம் கரண் - ஜித்தேஷ் சர்மா இணை அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஜித்தேஷ் சர்மாவும் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷஷாங்க் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதிலும் குறிப்பாக 20ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரிகளை விளாசியதுடன் 21 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி முதல் ஓவரிலேயே நான்கு பவுண்டரிகளை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் அடுத்தடுத்து 3 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக ராஜத் பட்டிதாரும் ஒருசில பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் ராஜத் பட்டிதார் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லும் 03 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் அணியின் நம்பிக்கையாக இருந்த விராட் கோலி 11 பவுண்டரி, 02 சிக்சர்கள் என 77 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த அனுஜ் ராவத்தும் 11 ரன்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் கடைசி மூன்று ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 18ஆவது ஓவரில் ஆர்சிபி அணி 13 ரன்களைச் சேர்க்க, கடைசி இரண்டு ஓவர்களுக்கு 23 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. அந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாச கடைசி ஓவரில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சென்றதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
அதன்பின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து ஆர்சிபியின் வெற்றியும் உறுதியானது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now