
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரன், பிரப்ஷிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ரைலீ ரூஸோவ், ஹர்ப்ரீப் பாட்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா அரைசதம் கடந்த நிலையில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.