ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ல்க்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய குயின்டன் டி காக் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் கேஎல் ரகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.பின்னர் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Trending
இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் தர்ஷன் நல்கண்டே பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ், மூன்றாவது சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை கணிக்க தவறியதுடன் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டையும் இழந்தார். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - ஆயூஷ் பதோனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் 3 சிக்சர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன், பிஆர் சரத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, குஜராத் அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த விஜய் சங்கர் - தர்ஷன் நல்கண்டே இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இதில் தர்ஷன் நல்கண்டே 12 ரன்களுக்கும், விஜய் சங்கர் 17 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரஷித் கான் ரன்கள் ஏதுமின்றியும், உமேஷ் யாதவ் 2 ரன்களையும் மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த ராகுல் திவேத்தியா 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, குஜராத் டைட்டன்ஸ் அணியும் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now