ஐபிஎல் 2024: சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; மும்பையை பந்தாடியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரோஹித் சர்மா 6 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷானும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அணியை சரிவிலிந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மும்பை அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த முகமது நபி மற்றும் திலக் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Trending
இப்போட்டியில் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி 2 பவுண்ட்ரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து திலக் வர்மாவுடன் இணைந்த நேஹல் வதேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 99 ரன்களை எட்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேஹல் வதேரா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த திலக் வர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸியும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட்டும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சந்தீப் சர்மா 18 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித் தள்ளினர். இதன் மூலம் ராஜஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைக் குவித்தது. அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் 35 ரன்களை எடுத்திருந்த ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சனும் கிடைக்கும் பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் வானவேடிக்கை காட்டினார். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் நடப்பு சீசனில் இதுவரை ஃபார்மில் இல்லாமல் இருந்த ஜெய்ஸ்வால் இப்போட்டியில் சதமடித்து ஃபார்மிற்கு திரும்பினார்.
அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 104 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலில் தங்களது முதல் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது.
Win Big, Make Your Cricket Tales Now