
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் 2025க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அமைப்பு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலைகளை எழுப்பியுள்ளார், மெகா ஏலத்திற்குப் பிறகு அணி தன்னை பலவீனப்படுத்திவிட்டதா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். ஏனெனில் அந்த அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஜோஸ் பட்லர், டிரென்ட் போல், யுஸ்வேந்திர சஹால், அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.