ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய இஷான் கிஷான் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஷர்தூல் தககூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்களுக்குள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அதன்பின் இணைந்த டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசெனும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் எதிர்பாராவிதமாக ரன் அவுட்டாகினார். பின்னர் நிதீஷ் ரெட்டியுடன் இணைந்த அனிகெத் வெர்மா ரன்களைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கினால்.
பின்னர் நிதீஷ் ரெட்டி 32 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையடைய அனிகெத் வெர்மாவும் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை சேர்த்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியா ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மார்ஷுடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடியதுடன் சிக்ஸர் மழை பொழிந்தார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 116 ரன்களை எட்டியது.
பின்னர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 70 ரன்களைக் குவித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஆயூஷ் பதோனி, கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் அப்துல் சமத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களையும், டேவிட் மில்லர் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now