ஐபிஎல் 2025: கேகேஆர் பிளே ஆஃப் கனவை கலைத்த சிஎஸ்கே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 11 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் நரைனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சுனில் நரைன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மனீஷ் பாண்டே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட மறுமுனையில், அரைசதத்தை நெருங்கிய அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸலும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும், ரிங்கு சிங் 9 ரன்களிலும் என ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்க்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே அணி தர்ப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், ஆன்ஷுல் கம்போஜ், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே இருவரும் தலா இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கையோடு ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அறிமுக போட்டியில் விளையாடிய உர்வில் படேல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில், 11 பந்துகளில் ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மேற்கொண்டு ரவிச்சந்திர அஸ்வின் 8 ரன்களுக்கும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 60 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ஷிவம் தூபே இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேற்கொண்டு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த கையோடு ஷிவம் தூபே ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நூர் அஹ்மதும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் சிஎஸ்கே அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இன்னிங்ஸின் கடைசி ஓவரை கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட எம் எஸ் தோனி சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எம் எஸ் தோனி 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், கேகேஆர் அணியானது 6ஆவது தோல்வியைத் தழுவி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. இதனால் கேகேஆர் அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now