
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 11 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் நரைனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சுனில் நரைன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மனீஷ் பாண்டே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட மறுமுனையில், அரைசதத்தை நெருங்கிய அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.