
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பெரிதளவில் எடுபடாத நிலையில், கெய்க்வாட்டும் விலகியது அணிக்கு சரிவை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டிற்கான மாற்று வீரரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியிலும் சிஎஸ்கே அணி இறங்கியது. இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக மும்பை தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரேவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 17 வயதான மத்ரே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார்.