
ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்று மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கெல்டன் 11 ரன்னிலும், ஜேக்ஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா 70 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.