
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், இறுதிவரை போராடிய ஆயூஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமத் 45 ரன்களையும் சேர்த்த நிலையிலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.