இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பாதுகாப்பு காரணங்களாலும், சர்வதேச போட்டிகள் காரணமாகவும், காயம் காரணமாகவும் சில வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றன. இதற்கு மத்தியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு உத்வேகமளிக்கும் வகையில், அந்த அணியின் துணைக்கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர்.