
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கியன் சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்த இஷான் கிஷனும் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கினார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 18 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த இஷான் கிஷனும் 17 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், அவரைத்தொடர்ந்து 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதீஷ் ரெட்டியும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.