
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் வீரர்கள் மேகா ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா அணியின் அங்கமாக இருந்த இஷான் கிஷான், உள்ளூர் போட்டிகளை தவிர்த்து ஐபிஎல் தொடருக்காக தயாரானதன் காரணமாக, அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இந்திய அணியில் தான் இழந்த இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.