
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷான், நிதீஷ் ரெட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட்டும் 22 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 37 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த அனிகெத் வர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.