
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக தனது அணியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸான்ஃபரை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் மீது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரின் போது அல்லா கசான்ஃபர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 மாத காலம் ஆகும் என்பதால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து அல்லா கஸான்ஃபர் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கான மாற்று வீரரைத் தேர்வு செய்யும் முயற்சியில் மும்பை அணி இறங்கியது.