
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பிரப்ஷிம்ரன் சிங் - ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் இங்கிலிஸ் ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயாரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களில் ஆட்டமிழந்தர்.