
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முலான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 30 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் தரப்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.